Blood on Water”- என்.டி.டி.வி.யின் ஆவணப்படத்தில் கூறப்படுவது என்ன?

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, June 3, 2010 at 3:34 PM

‘நாங்கள் இலங்கையில் இருக்க முடியாதவாறு சிறிலங்காப் படையினர் எம்மைத் துன்புறுத்துகின்றனர். எங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எங்களின் சகோதரர்களை, எங்களின் மக்களை சிறிலங்காப் படையினர் சித்திரவதை செய்கின்றனர். அவர்களைக் கொல்கின்றனர். இதனால் அங்கிருக்க முடியாமல் அவுஸ்ரேலியா செல்வதற்காக நாங்கள் புறப்பட்டோம்.’

இந்த உரையாடல் “Blood on Water” எனும் தலைப்பில் இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.வி ஒளிபரப்பிய விவரண ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விவரணச் சித்திரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால் இந்த ஆவணபடத்தை வாபஸ் பெறுமாறு இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் காரியவசம் குறித்த தொலைக்காட்சி சேவைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.



தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் அங்கு இயல்பாக வாழ்வதற்கான எவ்வித அமைதியான சூழ்நிலையும் உருவாகவில்லை என்பதையும், தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிடவே விரும்புகிறார்கள் என்பதையும் அது வெளிப்படுத்துகின்றது.

இதேபோன்றே, தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வருகின்றார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அது வெளிப்படுத்தியது. சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாததாலேயே தாங்கள் இங்கே வந்ததாக இலங்கைத் தமிழ் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கையில் கடந்த வருடம் போர் ஓய்வடைந்ததற்குப் பின்னரும் தமிழ் மக்கள் அங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுவதையே இத்தகைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.


வவுனியா தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு எந்தவொரு அனைத்துலக ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகைய தடுப்பு முகாம்களில் இருந்து மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. இவ்வாறு மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விலும் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்து விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கான சுதந்திரத்தை வழங்குவேன் என்று குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அம் மக்களுக்கு என்ன சுதந்திரத்தை வழங்கினீர்கள் எனக் கேட்கவும் எவருமில்லை.

போர் முடிவடைந்து விட்டது என்பது சமாதானம் உருவாகி விட்டது என்று அர்த்தப்படாது என ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் அனுருத்த செனோய் தெரிவிக்கின்றார்.

மீண்டும் ஓர் போர் உருவாகாத வகையில் சமாதானமும் தேசிய நல்லிணக்கமும் உண்மையான அர்த்தத்துடன மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா சிறிலங்காவுக்கு ஏற்படுத்திய அழுத்தங்கள் போதுமானதாக இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையைச் சிங்கள நாடாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதைத் தான் செய்து வருகின்றார். மாறாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தாலும் அதனைத்தான் செய்திருப்பார். எங்களைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஒரே மாதிரித்தான். தமிழ் மக்களைப் பொறுத்த வரை அழிவு அழிவு தான் என தமிழ் இளைஞர் ஒருவர் கூறுகின்றார்.

போர் முடிவடையும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டினார்கள். ஆனால் போர் முடிவடைந்த பிறகும் எங்களை சிறிலங்காப் படையினர் மீன்பிடிக்க அனுமதிக்கவில்லை.

சிறிலங்காப் படையினர் கடலில் எங்களைக் கண்டதும் சுட்டுத் தள்ளுவதாக தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் குறிப்பிடுகின்றார். இதுவரை 300 தமிழக மீனவர்கள் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், 500 தமிழக மீனவர்கள் காயப்பட்டுள்ளார்கள்’ என்று என்.டி.டி.வி.யின் ஆவணப்படத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

வள்ளுவம்.

Comments:

There are 2 comments for Blood on Water”- என்.டி.டி.வி.யின் ஆவணப்படத்தில் கூறப்படுவது என்ன?

Post a Comment