மொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்?

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, November 17, 2022 at 10:52 AM

             கல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேரிடும் குறைகள் ‘கல்வி’ எனும் துறை முழுவதும் பரவியுள்ளதை உணர முடிகிறது. பல அறிஞர்கள் கல்வியைப்பற்றி கூறும் குறைகள் யாவும் கற்பித்தலிலிருந்தே எழுகின்றன. கல்வித் துறையில் தொழில் நுட்பம் எத்துணையளவு ஆராய்ச்சிகளால் வளர்ந்திருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறுதான் பணியாற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கற்பித்தல் எனும் தம் குறிக்கோளில் எவ்வளவு உயரம் உயர்ந்திருக்கின்றார் என்று அளவிடுதலை விடத் தம்முடைய மாணவர்களை ஆசிரியர் எவ்வளவு உயர்த்திருக்கிறார் என்று அளவிடுதலே சிறந்தது.
                மொழியியல் சம்மந்தமான பாடங்களான தமிழ், மலாய் , ஆங்கிலம், சீனம் என்பது இந்நாட்டில் மொழிப்பாடங்களில் தலையானதாகக் கருதப்படுகிறது. இவைகள் அனைத்தும் முதன்மை பாடங்களாகவும் சார்புப் பாடங்களாகவும் தமிழ், சீன, மலாய் , ஆங்கிலப் பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் 6 ஆண்டு காலமாகத் தமிழை முதன்மைப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றனர். இப்படி மொழிப்பாடங்களைக்க் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பலவகையான இலக்கன இலக்கிய அறிவு அத்தியாவசியமான் ஒன்றாகத் திகழ்கிறது. அதுமட்டுமின்றி ஆசிரியருக்கு மொழியைப் பற்றிய நல்ல ஒரு தெளிவும் முறையான புரிதலுமே ஒரு சிறந்த மொழியில் அறிவைப் பெறக்கூடிய மாணாக்கணை உருவாக்க முடியும்.

              மொழிக்கற்றல் கற்பித்தல் என்பது வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியும் நடைபெறக்கூடிய ஒரு தொகுப்பாகும். இந்த நிகழ்வின் போது மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் பல திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் ஆசிரியர் தான் போதிக்கக் கூடிய மொழியில் நல்ல பேச்சாற்றலைக் கொண்டிருப்பது மிக அவசியமாகும். அப்படி, தான் போதிக்கக் கூடிய மொழியில் ஆசிரியருக்கு புலமை இல்லாமையாலும் போதிய திறம் இல்லாமையாலும் போதிப்பதைத் தவிர்ப்பது நலம். காரணம் இது மாணவர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பும் அப்பாடத்தின் மீது நாட்டத்தைக் குறைக்கவும் வழிச் செய்யும். ஆகவே ஆசிரியர் எப்போதும் தான் போதிக்கவிருக்கும் மொழியை மாணவர்களுக்கு நன்கு கற்பிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றப்பிறகே போதித்தல் ஒரு தரமான கற்றல் கற்பித்தல் நிலையை ஏற்படுத்தும். ஆகவே, ஆசிரியர் எப்போது தான் பயிற்றுவிக்கும் மொழியை முதலில் தெளிவாகவும் இலக்கண பிழயின்றி பயன் படுத்தக்கூடிய திறனையும் கையாள்வது அவசியமான ஒன்றாகும்.

                  ஓர் ஆசிரியர் வகுப்பின் முன் போதிக்கும்போது, அவர் மொழியைக் கையாளும் முறையே மாணவனை அவரின் கட்டுப்பாட்டிட்குள் வைக்கும் முதல் ஆயுதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் போதனையை கேட்கும் மானவனும் எவ்வித தடங்களும் இன்றி தனக்குள் ஏற்படுகின்ற தேடலை முறையே உள்வாங்கிக் கொள்வான். அதுமட்டுமின்றி நல்ல மொழியைப் பேசக் கூடிய ஆற்றலையும் பயன்படுத்தக்கூடிய முறையையும் எவ்வித கலப்பு மொழிகளின்றி அவனாலும் சிறு வயது முதலே பயன்படுத்தவியலும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள நாப்பழக்கம் என்பது வாய்மொழிப்பயிற்ச்சியைக் குறிக்கும். கைப்பழக்கம் எனபது எழுத்து மொழிப் பயிற்ச்சியை குறிக்கும். ஒரு மாணவனுக்கு மட்டுமல்லாது ஓர் ஆசிரியருக்கும் தொடர்ந்த பயிற்சி இல்லையென்றால் மொழியைக் கையாள்வதில் முழுமை ஏற்படாது.

            எனவே, தன்னுடைய சுய ஆற்றலை வளர்த்துக் கொள்ள மொழியியல் ஆசிரியர்கள் தங்களின் துறைச்சார்ந்த பாடத்தில் காலத்திற்கேற்ப தன்னை மேல்நோக்கிக் கொள்வதில் குறியாக இருத்தல் வேண்டும். இதற்கு வாசிப்பு முக்கியப்பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நவீன யுகத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய துறைச்சார்ந்த அறிவைப் பெறுவதற்கு இணயத்தைக் கையாள்வதில் கைத்தேர்ந்தவராக இருத்தல் மிக அவசியமாகும். இணையத்தின் வாயிலாக மொழியைக் கற்பவர்கள் பல கருத்து பரிமாற்றம் செய்வதன் மூலமாகவும் உலகளாவியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். குறிப்பாக என்னைப் போன்று தமிழ் மொழி போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்று உலகளாவிய நிலையில் தமிழ் மொழியைப் கற்பிப்பதற்கு தமிழ் நாட்டு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடக்கி நடத்தி வருகிறது. இதில் ஆசிரியர் தங்களையும் தங்கள் தரத்தையும் போதனா முறைகளையும் மேம்படுத்திக் கொள்ள தமிழில் சான்றிதழ், பட்டயம், பட்டம், பட்ட மேற்படிப்பு முதலானவைகளை முறையே மலேசியாவிலிருந்தே இணையத்தின் வாயிலாகவே மேற்கொள்ளலாம்.

             மேலும், ஆசிரியர்கள் தாங்கள் மாணவர்களைப் பரீட்சைக்காகத் தயார்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுகின்ற ஒரு இயந்திரத்தன்மையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்தே ஆக வேண்டும். பிற பாடங்களைக் காட்டிலும் மொழிப்பாடங்களுக்கு இந்த எண்ணம் ஒரு பேரபாயத்தை ஏற்படுத்தும். தற்போதைய அவசரக் கல்விச் சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களை பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற அனுமானங்களின் அடிப்படையில் போதிப்பது மாணவர்களின் சிறப்புத் தேர்ச்சியை மாணவர்களின் எண்ணிக்கையில் காட்டுமே தவிர, அவர்களின் தரத்தில் காட்டுவதில்லை. இச்செயல்கள் மாணவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் பெறக்கூடிய எண்ணத்தைத்ததன் முன்நிறுத்துமே தவிர, அவர்களின் மொழியியல் அறிவை அடைந்தனரா என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறிதான்.

                  ஆகவே, மொழிப்பாடங்களைப் போதிக்கின்ற மொழியியல் ஆசிரியர்கள், மொழியியல் சார்ந்தவைகளை வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், மொழியறிவுடன் போதிக்கக் கூடிய ஆற்றலை மாணவர்களுக்கு போதிக்க தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடல் இதற்கு மிக முக்கியமாகத் திகழ்கிறது. ஆசிரியர்கள் அவ்வப்போது ஒன்று கூடி, தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, இலக்கண இலக்கியங்களை மாணவர்களின் தரத்திற்கேற்றவாரும் மொழிவிளையாட்டுகள் மூலமாகவும் செம்மைப் படுத்திக் கொண்டால், மொழியியல் குறைகளை ஆசிரியர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மாணவர்களிடமிருந்தும் குறைத்து விடலாம்.

               இறுதியாக, ஆசிரியர் தங்களின் அறிவுப் புலமை மட்டுமின்றி, மாணவர்களின் அறிவுப் புலமையையும் செம்மைப் படுத்த வேண்டும். மொழியின் இலக்கண மரபுகளை நன்கு அறிந்தவரால்தான் மொழியைப் பிழையின்றி பேச முடியும். மனதில் தோன்றும் எண்ணங்களைப் பிறர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூற முடியும். இன்றைய உலகில் இதழியல் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது.பலதரப்பட்ட பிரிவினர்களும் செய்தி ஏடுகளை வெளியிடத் தொடங்கி விட்டனர். அவ்வேடுகளை வாங்கிப் படித்தால் அதிகமான ஒற்றுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் இலக்கணத்தை முறையாகவும், நிறைவாகவும் கற்றல் வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் கற்றல் சிறப்படையும். மொழி செம்மையுறும்.



Comments:

There are 1 comments for மொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்?

Post a Comment