ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? – பாரதி ஒரு பார்வை!

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, January 12, 2023 at 9:07 PM

         கவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கூடு விட்டு கூடு பாய்தலுக்கு ஒப்ப ஏற்றுணர்வும் உடையவனாக ஒரு கவிஞன் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் கொள்கையாகும் என்கிறார் அ.அ. மணவாளன். பிறரது துன்பத்தைக் காணும் போது தனக்கே நேர்ந்தாற் போல் உண்மையான கவிதையைப் படைக்கக்கூடியவனாக இருப்பான் கவிஞன். அதுவே, யாப்பிலக்கணம் படித்துக் கவிதை எழுதக்கூடியவன் பதங்களோடு அவற்றைப் பின்னும் திறன் படைத்தவனாக இருக்கக்கடவான் எனும் பாரதியின் கருத்தை அறியும்போது அவனுடைய கவிதைக் கொள்கையின் ஆதர்சம் எதுவென எளிதில் புரிந்து கொள்ளலாம். பிறர் துயரைக் களைவதுதான் அந்த மாகவியின் இலக்கிய நோக்கமாகும்.

          நிகழ்கால தோற்றத்தில் மனிதனின் நிறமும் வடிவமும் இல்லாது வெறும் கற்பனைச் சுவரில் ஏந்தி நிற்கும் சித்திரம் போல் இலக்கியம் உருபெறுவதில்லை. இலக்கியத்தின் பாடுபொருள், வாழ்க்கையின் அனுபவம் சார்ந்தே விளங்குதல் வேண்டும். அனுபவிக்காத பொருள்களை தன்னுடைய வசனத்திலோ அல்லது கவிதையிலோ காணவியலாது. அனுபவம் சாராத போலி விடயங்கள் எப்போதும் பேரிலக்கியமாகவும் ஆவதில்லை. ஒரே வரியில் சில நேரங்களில் வாசகனின் உள்ளத்தில் பளிச்சிட வைக்கும் வகையில் பொருளையோ அல்லது காட்சியையோ படைத்துக்காட்டும் பண்பு சங்கக்காலப் புலவர்களைச் சார்ந்ததாகும். தமக்குத் தெரியாத காட்சிகளை தங்களின் பாடல்களில் அவர்கள் காட்டியது கிடையாது. இயற்கையை நேரிடையாகக் கண்டு உணர்ந்தவற்றையே பாடும் இயல்புடையோர்கள் அவர்கள்!

         பாலைநிலம் பாடிய பெருங்கடுங்கோ நெய்தலைப் பாடவில்லை. நெய்தலைப்பாடிய அம்மூவனார் குறிஞ்சியைப் பாடவில்லை. குரிஞ்சியைப் பாடிய கபிலர் மருதநில வாழ்க்கையைப் பற்றி பாடவில்லை. சொந்த அனுபவங்களை மட்டுமே அடித்தளமாக்கி, அதீத கற்பனைகளிடம் அடைக்கலம் தேடாமல் இயற்கையோடு இயைந்து மண்ணின் மணத்தைப் பாடியதால்தான் அவர்களுடைய பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நிலைத்திருக்கின்றன.

         கவிதை ஒரு மோகனக் கனவாக பாரதிக்கு என்றும் பட்டதில்லை. வாழ்க்கையின் இரகசியமறிந்து அதன் முன்னேற்றத்தைக் காண விழையும் கருவியாக மாற்ற விழைந்தவனே அவன். பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை போன்றவற்றை பொறுத்தி வடித்தவன் அவன். இலக்கியத்தில் நேர்மைதான் பாரதிக்கு முக்கியம்.  அது கவிதையானாலும், வசனமானாலும் நேர்மை துலங்க நடக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பு. உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் கை தானாகவே நேரான எழுத்தெழுதும் என்கிறான்! ஒரு நல்ல கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதில் அவனுக்குத் தனி பார்வை இருந்தது.

கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
காற்றையும் வானவெளியையும் சேர்த்து
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் – பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

- எனும் கவிதையில் கள்ளின் இன்பமும் மயக்கமும் கலக்க வேண்டும். அது தீயைப் போல் உள்ளத்து உணர்ச்சிகளை சூடேற்றி, சமூகத்தில் தீமைகளை அழிக்கும் சக்தியாக உருவெடுக்க வேண்டும்; காற்றைப் போல் குளிர்ந்தும் கட்டற்றும் சுதந்திரமாக இயங்க வேண்டும்’ எல்லாவற்றையும் உள்ளடக்கி, எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் வானவெளியைப்போல் திகழ வேண்டும் என்ற பாரதியின் பார்வை எவ்வளவு அற்புதமானது!









Comments:

There are 0 comments for ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? – பாரதி ஒரு பார்வை!

Post a Comment