
வணக்கம். நான் இலக்கியப் பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் என்னை அதிக சிந்த்திக்கத் தூண்டிய பதிப்புகளில் ஐயா ஜெயமோகன் அவரின் படைப்புக்களும் ஒன்று . அவ்வகையில் என்னை நான் ஆழப்படுத்தி கொண்டதற்கு ஐயா ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் ஆரம்ப காலக்கட்டத்திலிருந்தே எனக்குப் பெரும் பங்காற்றின. ஆனால் அன்னாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்பதை நான் சிரிதும் எதிர்பார்க்கவில்லை. ஐயாவின் முதல் நாள் வருகையின் போது துவான்க்கு பைனூன் ஆசிரியர் பயிற்சி கழகத்தில் தமிழ்த்துரையின் ஏற்பாட்டில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சந்தித்தேன் . ஐயா ஜெயமோகன் நிகழ்வில் பேசுகையில் இலக்கியத்தில் கற்பிக்கப்படும் அறங்கள் குறித்து மேலும் தெளிவாக முன்வைக்க கதைகளின் வழி விளக்கினார். அறங்களை மட்டும் போதிப்பது ஒரு நல்ல இலக்கியமாகக் கருத முடியாது. அது வெறும் திருப்தி படுத்தும் அளவுக்குத்தான் அமைந்திருக்கும் எனவும், இலக்கியம் என்பது அனைத்தையும் உள்வாங்கப்பட்ட ஒன்று எனவும் அந்த அறத்தின் வழி உருவாகும் வெளிப்பாடுகளை ஒரு கலையாகத் ஒரு காலச்சூழலில் தருவதில் இலக்கியத்திற்கு முக்கியமான இடம் உண்டு எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஐயா அவர்களை
நேற்று நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நேற்று காலையில் எனக்கு ஏற்ப்பட்டது.இச்சந்திப்பு கூலிம் தியான
ஆசிரமத்தில் நடைபெற்றது. இதில் நான், நண்பர் கே.பாலமுருகன், எழுத்தாளர் கோ.புண்ணியவான், விரிவுரையாளர் தமிழ் மாறன் ஆகியோரும் கலந்து கொண்டோம். எங்களோடு சுவாமி பிரமானந்தா சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டார். ஐயா ஜெயமோகன் அவர்கள் பல விடயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்குள் அடங்கியிருந்த பல கேள்வி முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டன என்றே கூறவேண்டும். ஒரு நல்ல இலக்கிய படைப்பளியாக உருவெடுக்க ஒருவர் முதலில் ஒருநல்ல படிப்பாளியாக இருக்க வேண்டும் என்றார். மேலும் தற்போது தமிழில் நிறையா உலக இலக்கியங்கள் மொழிப் பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் அதனை தவறாது வாசிக்கவும் வேண்டும் எனவும் ஐயா அவர்கள் குறிப்பிட்டார். மேலும் ஆரம்ப நிலை எழுத்தளர்கள் நிறைய வாசிப்பதோடு மட்டுமின்றி மொழி வளம் பெறவும் நிறைய எழுத வேண்டும் என்பது அவருடைய கருத்தாக அமைந்தது.

பல எழுத்தாளர்களைப் பற்றியும் பல எழுத்துப் படிவங்களைப் பற்றியும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, ஆன்மீக விடயங்களையும் தன் வாழ்க்கை அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டது எனக்கு ஒரு உந்துதலாக அமைந்தது. நேற்றைய பொழுது என்னை நானே மறந்து இலக்கிய உலகத்தின் சுவையை சுவைத்ததிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே கூற வேண்டும். எங்களின் உரையாடல் ஏறக்குறைய 4 மணி நேரம் இழுத்ததா என்பது இன்னும் எனக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.