மொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்?

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, November 17, 2022 at 10:52 AM

             கல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேரிடும் குறைகள் ‘கல்வி’ எனும் துறை முழுவதும் பரவியுள்ளதை உணர முடிகிறது. பல அறிஞர்கள் கல்வியைப்பற்றி கூறும் குறைகள் யாவும் கற்பித்தலிலிருந்தே எழுகின்றன. கல்வித் துறையில் தொழில் நுட்பம் எத்துணையளவு ஆராய்ச்சிகளால் வளர்ந்திருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறுதான் பணியாற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கற்பித்தல் எனும் தம் குறிக்கோளில் எவ்வளவு உயரம் உயர்ந்திருக்கின்றார் என்று அளவிடுதலை விடத் தம்முடைய மாணவர்களை ஆசிரியர் எவ்வளவு உயர்த்திருக்கிறார் என்று அளவிடுதலே சிறந்தது.
                மொழியியல் சம்மந்தமான பாடங்களான தமிழ், மலாய் , ஆங்கிலம், சீனம் என்பது இந்நாட்டில் மொழிப்பாடங்களில் தலையானதாகக் கருதப்படுகிறது. இவைகள் அனைத்தும் முதன்மை பாடங்களாகவும் சார்புப் பாடங்களாகவும் தமிழ், சீன, மலாய் , ஆங்கிலப் பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் 6 ஆண்டு காலமாகத் தமிழை முதன்மைப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றனர். இப்படி மொழிப்பாடங்களைக்க் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பலவகையான இலக்கன இலக்கிய அறிவு அத்தியாவசியமான் ஒன்றாகத் திகழ்கிறது. அதுமட்டுமின்றி ஆசிரியருக்கு மொழியைப் பற்றிய நல்ல ஒரு தெளிவும் முறையான புரிதலுமே ஒரு சிறந்த மொழியில் அறிவைப் பெறக்கூடிய மாணாக்கணை உருவாக்க முடியும்.

              மொழிக்கற்றல் கற்பித்தல் என்பது வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியும் நடைபெறக்கூடிய ஒரு தொகுப்பாகும். இந்த நிகழ்வின் போது மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் பல திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் ஆசிரியர் தான் போதிக்கக் கூடிய மொழியில் நல்ல பேச்சாற்றலைக் கொண்டிருப்பது மிக அவசியமாகும். அப்படி, தான் போதிக்கக் கூடிய மொழியில் ஆசிரியருக்கு புலமை இல்லாமையாலும் போதிய திறம் இல்லாமையாலும் போதிப்பதைத் தவிர்ப்பது நலம். காரணம் இது மாணவர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பும் அப்பாடத்தின் மீது நாட்டத்தைக் குறைக்கவும் வழிச் செய்யும். ஆகவே ஆசிரியர் எப்போதும் தான் போதிக்கவிருக்கும் மொழியை மாணவர்களுக்கு நன்கு கற்பிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றப்பிறகே போதித்தல் ஒரு தரமான கற்றல் கற்பித்தல் நிலையை ஏற்படுத்தும். ஆகவே, ஆசிரியர் எப்போது தான் பயிற்றுவிக்கும் மொழியை முதலில் தெளிவாகவும் இலக்கண பிழயின்றி பயன் படுத்தக்கூடிய திறனையும் கையாள்வது அவசியமான ஒன்றாகும்.

                  ஓர் ஆசிரியர் வகுப்பின் முன் போதிக்கும்போது, அவர் மொழியைக் கையாளும் முறையே மாணவனை அவரின் கட்டுப்பாட்டிட்குள் வைக்கும் முதல் ஆயுதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் போதனையை கேட்கும் மானவனும் எவ்வித தடங்களும் இன்றி தனக்குள் ஏற்படுகின்ற தேடலை முறையே உள்வாங்கிக் கொள்வான். அதுமட்டுமின்றி நல்ல மொழியைப் பேசக் கூடிய ஆற்றலையும் பயன்படுத்தக்கூடிய முறையையும் எவ்வித கலப்பு மொழிகளின்றி அவனாலும் சிறு வயது முதலே பயன்படுத்தவியலும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள நாப்பழக்கம் என்பது வாய்மொழிப்பயிற்ச்சியைக் குறிக்கும். கைப்பழக்கம் எனபது எழுத்து மொழிப் பயிற்ச்சியை குறிக்கும். ஒரு மாணவனுக்கு மட்டுமல்லாது ஓர் ஆசிரியருக்கும் தொடர்ந்த பயிற்சி இல்லையென்றால் மொழியைக் கையாள்வதில் முழுமை ஏற்படாது.

            எனவே, தன்னுடைய சுய ஆற்றலை வளர்த்துக் கொள்ள மொழியியல் ஆசிரியர்கள் தங்களின் துறைச்சார்ந்த பாடத்தில் காலத்திற்கேற்ப தன்னை மேல்நோக்கிக் கொள்வதில் குறியாக இருத்தல் வேண்டும். இதற்கு வாசிப்பு முக்கியப்பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நவீன யுகத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய துறைச்சார்ந்த அறிவைப் பெறுவதற்கு இணயத்தைக் கையாள்வதில் கைத்தேர்ந்தவராக இருத்தல் மிக அவசியமாகும். இணையத்தின் வாயிலாக மொழியைக் கற்பவர்கள் பல கருத்து பரிமாற்றம் செய்வதன் மூலமாகவும் உலகளாவியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். குறிப்பாக என்னைப் போன்று தமிழ் மொழி போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்று உலகளாவிய நிலையில் தமிழ் மொழியைப் கற்பிப்பதற்கு தமிழ் நாட்டு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடக்கி நடத்தி வருகிறது. இதில் ஆசிரியர் தங்களையும் தங்கள் தரத்தையும் போதனா முறைகளையும் மேம்படுத்திக் கொள்ள தமிழில் சான்றிதழ், பட்டயம், பட்டம், பட்ட மேற்படிப்பு முதலானவைகளை முறையே மலேசியாவிலிருந்தே இணையத்தின் வாயிலாகவே மேற்கொள்ளலாம்.

             மேலும், ஆசிரியர்கள் தாங்கள் மாணவர்களைப் பரீட்சைக்காகத் தயார்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுகின்ற ஒரு இயந்திரத்தன்மையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்தே ஆக வேண்டும். பிற பாடங்களைக் காட்டிலும் மொழிப்பாடங்களுக்கு இந்த எண்ணம் ஒரு பேரபாயத்தை ஏற்படுத்தும். தற்போதைய அவசரக் கல்விச் சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களை பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற அனுமானங்களின் அடிப்படையில் போதிப்பது மாணவர்களின் சிறப்புத் தேர்ச்சியை மாணவர்களின் எண்ணிக்கையில் காட்டுமே தவிர, அவர்களின் தரத்தில் காட்டுவதில்லை. இச்செயல்கள் மாணவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் பெறக்கூடிய எண்ணத்தைத்ததன் முன்நிறுத்துமே தவிர, அவர்களின் மொழியியல் அறிவை அடைந்தனரா என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறிதான்.

                  ஆகவே, மொழிப்பாடங்களைப் போதிக்கின்ற மொழியியல் ஆசிரியர்கள், மொழியியல் சார்ந்தவைகளை வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், மொழியறிவுடன் போதிக்கக் கூடிய ஆற்றலை மாணவர்களுக்கு போதிக்க தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடல் இதற்கு மிக முக்கியமாகத் திகழ்கிறது. ஆசிரியர்கள் அவ்வப்போது ஒன்று கூடி, தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, இலக்கண இலக்கியங்களை மாணவர்களின் தரத்திற்கேற்றவாரும் மொழிவிளையாட்டுகள் மூலமாகவும் செம்மைப் படுத்திக் கொண்டால், மொழியியல் குறைகளை ஆசிரியர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மாணவர்களிடமிருந்தும் குறைத்து விடலாம்.

               இறுதியாக, ஆசிரியர் தங்களின் அறிவுப் புலமை மட்டுமின்றி, மாணவர்களின் அறிவுப் புலமையையும் செம்மைப் படுத்த வேண்டும். மொழியின் இலக்கண மரபுகளை நன்கு அறிந்தவரால்தான் மொழியைப் பிழையின்றி பேச முடியும். மனதில் தோன்றும் எண்ணங்களைப் பிறர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூற முடியும். இன்றைய உலகில் இதழியல் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது.பலதரப்பட்ட பிரிவினர்களும் செய்தி ஏடுகளை வெளியிடத் தொடங்கி விட்டனர். அவ்வேடுகளை வாங்கிப் படித்தால் அதிகமான ஒற்றுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் இலக்கணத்தை முறையாகவும், நிறைவாகவும் கற்றல் வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் கற்றல் சிறப்படையும். மொழி செம்மையுறும்.குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, October 13, 2022 at 11:30 PM


            குமரிக்கண்டம்! நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவியலவில்லை.ஆனால், இதனையொட்டி சில உண்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். குமரிக்கண்டமே தமிழனின் வரலாற்றின் ஆரம்பம் என்றும் கூறலாம். கடல்கோள்களால்  குமிரிக்கண்டம்  அழிவை எதிர் நோக்கியுள்ளது என்று அறிஞர்களும் கூறுகின்றனர். இவ்வழிவு கட்டம் கட்டமாக நிகழ்ந்திருப்பதாக நிலநூல் வல்லார்கள் தங்களது ஆராய்ச்சியில் நிரூபித்தும் வருகின்றனர்.  இதனையொட்டி  'ஸ்காட் எலியட்' (W.Scott Elliot)  என்பவரின் கருத்தினை சிந்திக்கவே வேண்டும். இவர் பதினாறாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் முதல் கடல் பெருக்கு  ஏற்பட்டதாகவும்,  மூன்றாவது  கடல் பெருக்கு இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகவும்,  நான்காவது கடல் பெருக்கு  எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிவை ஏற்படுத்தியதாகவும், ஐந்தாவது கடல் பெருக்கு கி.மு 9564இல் ஏற்பட்டதாகவும்  தனது ஆராய்ச்சியில் குறிப்பிடுகின்றார். இக்கூற்றை ஒப்பீடு செய்து பார்க்கும் போது அட்லாண்டிக் கடல் பகுதியில் முன்பு ஒரு பூகம்பம் ஏற்பட்டு 'பொசிடோனியஸ்' எனும் தீவு கி.மு 9564இல்அழிந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதுவே  முத்தமிழ் செல்வனின் தமிழக வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
                  குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம். அதில்,வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.
               முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்திருக்கலாம் .இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்றும் சான்றுகள் பகரப்படுகின்றன. அது  ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாகவும்  இருக்கலாம்.( நன்றி: அரவை அரன்.)
               நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான்  பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாகவே  இப்பகுதிகளின் அடித்தளங்கள், எரிமலை அதிர்ச்சியினால்  மிக விரைவில் இரவு நேரத்தில் மறைந்து போனதாகவும் இந்நில வெடிப்பில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாகவும் மொத்தம் 64000000 மக்கள் அழிந்ததாகவும் , தொறானோ கையெழுத்துப் படிவத்தில் உள்ளது. இப்படிவம் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிப்பதாகவும் , இன்றும் இலண்டனில் நூதனப் பொருட்காட்சி சாலையில் உள்ளது  என்றும்  'ஸ்காட் எலியோட்' கூறுகிறார். இதனைத் தொடர்ந்து பார்த்தோமானால், குமரி நாட்டின்  வடக்கு எல்லை  விந்திய மலையாக இருந்திருக்கிறது. இமயமலையும் சிந்து சமவெளிகளும் அப்போது  இல்லை. ஆகவே, குமரி நாடு ஆசியக்கண்டத்தின் ஒரு பகுதியாக இராமல் தனியான பெரு நாடாக நிலவி இருந்ததும், பிற்காலத்தில்  கடலுள் மறைந்துவிட்டதும் நாம் அறிதல் வேண்டும். குமரி நாட்டின் குமரி ஆறும் தெற்கே பஃதுளி ஆறும் அக்காலத்தில் ஓடிக்கொண்டிருந்தன என்பதை புறநானூற்றின் 9 ஆம் பாடலாலும் இதனை அறியலாம்.

தமிழனும் குமரிக்கண்டமும்: காணொளியைக் காண்க

            மேலும்,    குமரிக்கண்டம் ஒரு மிகப்பழமையான நிலப்பரப்பு. அங்கு தமிழன் தோன்றினான். அவனே உலகின் முதல் மனிதன். அவனே உலகின் அனைத்துப் பண்பாடுகளுக்கும் முன்னோடியான பண்பாட்டை உருவாக்கினான். தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றின. இவற்றையெல்லாம் பின்னாள்களில் வந்த ஆரியச் சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள் என்றும்
 தேவநேயப் பாவாணர் முதல் அப்பாதுரைவரை முன்வைக்கும் சித்திரம் இதுதான். இதற்கும் சான்றாகக் குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்றும் இவ்வுலகில் தோன்றிய முதல் குரங்கு மனிதனே  பழந்தமிழ் நாட்டனாகத்தான் இருக்க முடியும் என்பதோடு விஞ்ஞானிகள்,  நில நடுக்கோடு எப்பகுதியில் செல்கிறதோ, அப்பகுதியிலே, ஆதி கரு உற்பத்தியாக முடியும் எனவும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, சீனிவாச ஐயங்கரும்,   'பன்னெடுங் காலத்திற்கு முன் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களை உள்ளிட்டு, நில நடுக்கோட்டுப் பகுதியில் நிலவிய லெமுரியா விலங்கியது. இப்பகுதியே, மக்களின் பிறப்பிடமாக இருக்கலாம். தென்னிந்தியாவில் தோன்றி வாழ்ந்த பழங்குடி மக்களின் சந்ததிமார்களே திராவிடர்கள்.'  எனக் கூறுவதும் இங்கு சான்றாகிறது.(நன்றி: முத்தமிழ் செல்வன்)


      ஒரு அறிவியல் புனைவு லாகவத்துடன் இதற்கு அப்பாலும் போகக்கூடிய கற்பனையாளர்கள் உண்டு. உதாரணமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘குமரி மைந்தன்’ எனும் ஆராய்ச்சியாளரைக் குறிப்பிடலாம். குமரிக்கண்டக்காரர்கள் வெறுமனே மூதாதைகள் மட்டுமல்ல. அறிவியல் வல்லுனர்கள். ஆகாய விமானங்களை அப்போதே கண்டுபிடித்தவர்கள். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத்தக்க தொழில்நுட்பத் திறனாளிகள். உலகெங்கும் பறந்து பண்பாட்டைப் பரப்பியவர்கள். உலகின் மற்ற பாகங்களில் வாழ்ந்த பண்பாடில்லாத மக்களுக்குப் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் அளித்தமையால் இவர்களை அம்மக்கள் ‘கடவுள்களாக’ வணங்கினர் எனவும் கூறப்படுகின்றது.
             தொடர்ந்து, ஆதிமனிதன் மூதாதைகளுக்கு ஆஸ்திரேலா பிதகஸ்(குரங்கு மனிதன்) பிதகாந்தரப்பாஸ் (மனிதனின் மூதாதை). ஹோமா சாப்பியன் (ஆதிமனிதன்) என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கின்றனர். இந்துமாக் ஓரத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவிலும், ஜாவாவிலும் மனிதனின் மூதாதையர்கள் வாழ்ந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதற்கான சான்று (Burns Edward Mc And Philip Lee Ralph, World Civilization: From Ancient to Contemporary, Vol 1 ) ல் உள்ளது.
             அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும், குமரிக்கண்டத்தின் சான்றுகள்  பல காணவே படுகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்கும்போது,  பழந்தமிழ் நிலப்பகுதியே ஆதித் தமிழரின் தாயகம் என்ற முடிவுக்கு நாம் வருவதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. மேலும், ஆதி மூதாதை ஆதித் தமிழினத்தார் என்றே கூறவும் வேண்டும்.      தொடரும்....

(குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் யாம் படித்ததையொட்டியும், எந்தன் தேடலையொட்டியுமே அமைந்திருக்கிறது. பல மேற்கோள்களைக் கொண்டே செய்திகளை முன் வைத்துள்ளேன்.  இங்கு விடுப்பட்ட  விடயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. )