உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து 4,000 தமிழ் அறிஞர்கள்

Posted by Justin Jeevaprakash | | Posted On Tuesday, June 22, 2010 at 6:22 PM


        வணக்கம். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக, 50 நாடுகளில் இருந்து 4 ஆயிரம் தமிழ் அறிஞர்கள் கோவை வருகிறார்கள். மாநாட்டு ஆய்வரங்க வளாகத்தை, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, 23-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. மாநாடு தொடங்க இன்னும் 2 நாட்களே இருப்பதால் கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
செம்மொழி மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நடக்கும் கொடிசியா வளாகத்தில், அதிநவீன உள்அரங்கம், பிரமாண்ட விழா பந்தல், மேடை, கண்காட்சி அரங்கம், பழங்கால அரிய பொருட்கள் இடம்பெறும் கண்காட்சி அரங்கம், 21 ஆய்வரங்குகள், உணவுக்கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
         அரண்மனை கோட்டை வடிவிலான பிரமாண்ட மாநாட்டு பந்தலின் முகப்பு, கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தல் மற்றும் அரங்கங்களை சாரைசாரையாக பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்த இடமே சுற்றுலாத்தலம் போல காட்சி அளிக்கிறது. 23-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். அன்று மாலை பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் `இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்கின்றன.
            பேரணியை முக்கிய பிரமுகர்கள் பார்வையிட அவினாசி ரோடு ஹோப் கல்லூரி முதல் ரங்கவிலாஸ் மில் வரை 11/2 கிலோமீட்டர் தூரம் நீண்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பார்வையிடுவதற்காக சி.ஐ.டி. கல்லூரி அருகே குண்டு துளைக்காத தனிமேடை அமைக்கப்பட்டு உள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், 50 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்கிறார்கள். மொத்தம் 1,020 தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
            பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அஸ்கோபர் போலா, இலங்கையைச் சேர்ந்த சிவதம்பி ஆகியோர் கோவை வந்துள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த மற்ற தமிழ் அறிஞர்கள் கோவை வந்த வண்ணம் உள்ளனர். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு கோவை வந்து மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தார். நேற்று காலை கோவை வ.உ.சி. மைதானத்தில் தயாராகும் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார். பின்னர் அவர் திருச்சி ரோட்டில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டபின் கொடிசியா வளாகத்துக்கு சென்றார்.
           21 குளு, குளு ஆய்வரங்குகளையும், புதுப்பிக்கப்பட்ட கொடிசியா வளாகத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அவருடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, சுரேஷ்ராஜன், தமிழரசி, பூங்கோதை, சாமிநாதன், தனிஅலுவலர் அலாவுதீன், கலெக்டர் உமாநாத், செய்தித்துறை செயலாளர் முத்துசாமி, மாநகராட்சி ஆணையாளர் அன்சுல்மிஸ்ரா, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாநாட்டையொட்டி கோவையில் சிறைச்சாலை மைதானம், காந்தி பூங்கா, வடவள்ளி மருதமலை ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி உள்பட 11 இடங்களில் செம்மொழி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தமிழர் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையில், 22-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
            நேற்று மாலை காந்திபுரம் சிறை வளாகத்தில் நடந்த செம்மொழி கலைவிழாவை துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த கலைநிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கிறார்கள்.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு `இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
          வரவேற்பு முடிந்ததும் அவர் கொடிசியா அரங்கிற்கு சென்று மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்டார். முதல்-அமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார்.  மாநாட்டை தொடங்கிவைப்பதற்காக, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 22-ந் தேதி மாலை கோவை வருகிறார். ஜனாதிபதி, முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதிகள், அரசு விருந்தினர் விடுதிகள் மற்றும் தமிழ் அறிஞர்கள் தங்கும் விடுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் போலீசார் மற்றும் ஆயிரம் ஊர்காவல் படையினர் ஈடுபடுகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு பணியை தொடங்கி விட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநாட்டையொட்டி சிறப்பு பஸ்-ரெயில்கள், கூடுதல் விமானங்கள் விடப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
            மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட சாலைகள், பூங்காக்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என கோவை நகரமே ஜொலிக்கிறது. பேரணி நடைபெறும் அவினாசி சாலையிலும், மற்றும் முக்கிய சாலைகளிலும் தமிழ் இலக்கிய காட்சிகள், தமிழர்களின் வீரம், பண்பாடு ஆகியவற்றை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
            மாநாட்டுக்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்காக போதிய குடிநீர் மற்றும் உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 4 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 415 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.
நன்றி :

அலைகள் செய்தி தளம்

Comments:

There are 0 comments for உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து 4,000 தமிழ் அறிஞர்கள்

Post a Comment